Friday 24 January 2014

Thiruppavai 1

ஶ்ரீ: ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

மாலை கட்டிய மாலை

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள், பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் அவதரித்து, அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் வளரப்பெற்றாள். வட பெரும் கோயிலுடையானோடே தழுவி முழுசி பரிமாறவும் பாரித்தாள். அர்ச்சா ஸமாதியில் இருந்த அவன் முகம் காட்டாதே ஒழிய, இன்னாப்படைந்தவளாய், அவனோடு கலந்து பரிமாறின  திருவாய்ப்பாடிப் பெண்கள் விருத்தாந்தம் கேட்டு தானும் அநுகரித்து தரிக்கப் பெற்றாள் என்கிற அவள் சரித்திரம் பலரும் அறிந்ததே.  மடலெடுக்காதே, அவள் நோன்பிலே கை வைத்தது கிருஷ்ணனுடைய உபாயாந்தர அஸஹிஷ்ணுத்வத்தை கருத்திலே கொண்டு என்பர்.

பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டிருந்தார். ஆண்டாளோ பாகவத ஸம்ருத்தியை ஆசைபட்டாள். ஆண்டாள் பாடிய திருப்பாவை இதுக்கு ப்ரதீகம். பெரியாழ்வார் பிரதம பர்வத்திலே நிற்க, இவளோ சரம பர்வத்திலே ஊன்றினளாய்- சத்ருக்நாழ்வான் படியிலே நிற்கப்பெற்றாள். ”விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேலது காண்டும்”என்கிற நாச்சியார் திருமொழி பாசுரம் (௧0-௧0) இதுக்கு விஷயம்.

’மாலை மாலையால் கட்டிய மாலை’ என்று ஆண்டாள் பற்றி ஒரு பழமொழி உண்டு. அதாவது, திருமாலை, பாமாலை கொண்டு கட்டிய கோதை (மாலை) என்பது அதற்குப் பொருள். அந்த வகையிலே அவள் பாடிய பாசுரங்கள் ஒவ்வொன்றுமே ஒரு புஷ்ப குஞ்ஜா ஹாரம் என்றே சொல்லலாம். முதல் பாட்டில் தொடங்கி ’பாரோர் புகழ் மாலை’, ’உய்வு மாலை’ என்ற கணக்கிலே, திருப்பாவை ௯ வது பாசுரத்தை எடுத்துக் கொண்டு அதிலுள்ள ’திருநாம மாலையை’ சற்றே ஆராய்வோம் :

தூமணி மாடத்து...என்று தொடங்கும் இந்த பாசுரத்தின் ஈற்றடியிலே ”நாமம் பலவும் நவின்று” என்று ஆண்டாள் உறக்கத்தில் இருந்து எழுந்திராதவளை உணர்த்தும் முகமாக கண்ணனுடைய மேன்மை, நீர்மை, ச்ரிய: பதித்வம் இவைகளுக்கு அசாதாரணமாக இருக்கிற நாமங்களைச் சொன்னோம். அப்படியும் உணராது இருக்கிற இவளை”மாமீர் எழுப்பீரோ?” என்று சம்மோதிக்கிறாள், ஆண்டாள் இதிலே.

அவனுடைய மேன்மை, நீர்மை  குணங்களே பூக்களாக ஆண்டாள் கட்டிய மாலைதான் ”திருநாம மாலை” என்று இங்கு அழைக்கப்படுகிறது. அவைதாம் : மாமாயன், மாதவன், வைகுந்தன் என்கிற பரத்வ, ஶௌலப்ய, ஶ்ரீ:பதித்வம் இவைகளை பிரதிபாதிக்கிற திருநாமங்களாகும். அவை தன்னை எம்பெருமான் விஷயமகவும், ஆசாரய பரமாகவும் நம் பூர்வர்கள் அநுசந்திப்பர்.

எங்கனே என்னில் :

மாயா வயூனம் ஞானம் என்கிற நிகண்டு படி, எம்பெருமான் தன் இச்சா சக்தி-சங்கல்ப ஞானத்தைக் கொண்டு பிறக்கிறான் என்பதை தானே கீதா ஶாஸ்திரத்தில் - பிரக்ருதி ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா என்றானிறே. அத்தை ஆழ்வாரும் ”ஆதியம் சோதி” உருவை அங்கு வைத்து இங்கு பிறப்பதாக பேசியருளினார். தைவீக்யேஷா குணமயி மம மாயா துரத்யயா என்று ஆத்மாக்களை பந்திப்பதும், மாமேவ ஏதாம் தரந்திதே என்று விடுவிப்பதும் தானே என்றும் பேசினபடியை நோக்கலாம். இது தவிற அவனுடைய ஆஸ்சர்யகரமான சேஷ்டிதங்கள், மநுஷ்யத்வே பரத்வத்துக்கு விவக்ஷிதங்கள் என்றால் மிகையாகாது.

மாதவன் : என்றால் பெரிய பிராட்டிக்குக் கேள்வன் என்றும், ”மற்றவரை சார்த்தி இருப்பார் தவம்” என்கிற நான்முகன் திருவந்தாதி (௧௮) பாசுர கணக்கில், தவமாவது சேதன லாபத்துக்காக அவன் உத்யோகிக்குமது தொடக்கமானவை. அன்றிலே. தவமாவது ஈஶ்வரனை ஆஶ்ரயிப்பது. மாதவமாவது அவன் அடியார்களை ஆஶ்ரயிப்பது என்று கொண்டால் அவர்களுக்கு பரதந்ரனாய் கார்யம் செய்து தலைக்கட்டுவது, அவன் மாதவனாக இருந்தமைக்குப் பிரயோஜனம் எனலாம்.

வைகுந்தன் : ’வேர் முதல் வித்து’ என்று தன் பரத்வே பரத்வம் தோற்ற பரமபதத்தில் இருக்கும் இருப்பு.

பகவத் விஷயத்தில் சொன்ன இவைதமயே ஆசார்ய பரமாக பார்ப்போமாகில் -

மாமாயன் என்பதை ”பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப, இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு, புன்மையினோரிடைத்தான் புகுந்து தீர்த்தான் இருவினையும் தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான், இவை எம்பி இராமாநுசன் செய்யும் அற்புதமே” (௫௨) என்கிற இராமானுச நூற்றந்தாதிப் பாசுரத்தைக் கொண்டு பார்க்கில், . எம்பெருமானைப் போலவே, எம்பெருமானாரும் புற மதத்தவர்களை ஒருபாடு நடுங்கச்செய்தது; ஆஶ்ரயித்திருக்கு மவர்களை தன்னைப் போலவே ஆத்ம குண ஸ்ம்பன்நர்களாக்கி பாபங்களையும் கட்டோடு கழித்து, நம்பெருமாள் திருவடிகளுக்காக்கும் இவர் செயல்களும் ஆச்சரிய்மானவையே அன்றோ?

மாதவன்: என்பது ஸ்வாத்யாய நிரதம். இதுவும் ஒருவகையில் தபஶுதான். பரபக்ஷ நிரஸனுத்துக்காக வேத, வேதாந்தங்களிலே அந்வயித்தவராய், அருளிச்செயல்களே பொழுது போக்காய் தலை நின்றவர் எம்பெருமானார்.

வைகுந்தன்: என்பது இவர் விஷயத்தில் வைகுண்ட பிரதத்வமாகிற ”உபாய” கிருத்யமாகும். ’வைகுண்ட மணிமண்டப மார்கதாயி’ என்று இவர் ஸம்பந்தம் உண்டாமால் மோக்ஷம் என்பது ஸம்பிரதாயம்.

ஆக, எம்பெருமான் விஷயமாகவும், ஆசார்ய விஷயமாகவும் பல நாமங்களைச் சொன்னோம் - நாமம் பலவும் நவின்று - என்று பூங்கண்ணி புநைதமையைப் பேசினாள் ஆண்டாள். இதுவே அவள் கட்டிய ”திரு நாம மாலை”. மாலுக்காக மாலை கட்டிய மாலையாகிற கோதை நம் ஆண்டாள் என்பதை ஐயம் திரிபற இத்தால் விளக்கப்பட்ட தன்றோ?

These are Excerpts from Vidwan U. Ve. Shri. Ilaya Villi S. BhoovarahachAr Swamy ThiruppaVai discourses held at Sri Yethugiri Ethiraja Mutt, Bangalore-3 between 15-12-2013 to 14-01-2014. Compilation by:

--கிடாம்பி ஶ்ரீநிவாஸ ரங்கன் ஶ்ரீநிவாஸ தாஸன்.









No comments:

Post a Comment